மழை வேண்டி கிராம மக்கள் நுாதன வழிபாடு
நாமக்கல், நாமக்கல் அருகே, மழை வேண்டி கிராம மக்கள் மழைக்கஞ்சி குடித்து நுாதன வழிபாடு செய்தனர்.நாமக்கல் -- திருச ்செங்கோடு சாலையில், மணிக்கட்டிபுதுார் அடுத்த கணக்கம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அங்கு ஆண்டுதோறும் பெய்யும் மழையால், விவசாயம், கால்நடை வளர்ப்பு, கோழி பண்ணை தொழில்கள் மேலோங்கி இருக்கும். நடப்பாண்டு போதிய மழை இல்லாததால், அப்பகுதி முழுவதும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் கிராம விவசாயிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதனால், வருண பகவானை குளிர்விக்கும் வகையில் மழை வேண்டி, ஐந்து நாட்கள் தொடர்ந்து விரதம் மேற்கொண்டு மழைக்கஞ்சி அருந்தி வழிபாடு செய்தனர்.ஐந்து நாட்கள் விரதம் மேற்கொண்ட பெண்கள், இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, வீடுவீடாக சென்று உப்பில்லாத சோறு வாங்கிவந்து, பானையில் கொட்டி கரைத்து அதை அனைவரும் எவ்வித பாத்திரம் இல்லாமல் இருகைகளில் ஏந்தி சாப்பிட்டு, கூட்டாக ஒப்பாரி வைத்து அழுதனர். தொடர்ந்து, குழந்தைகளுடன், 'அப்பா சோறு, ஆயா சோறு' என, கத்தி அழுதவாறு கிணற்று வரை சென்றனர். அங்கு வந்த ஆண்கள், அவர்களுக்கு கூலி வழங்கி ஊருக்குள் அழைத்து வந்தனர். பின், விநாயகர் கோவில், மாரியம்மன் கோவில் மற்றும் வீடுகளில் வரிசையாக படுத்திருந்த சிறுவர், சிறுமியர் மீது தண்ணீர் தெளித்து, 'மழை வந்துவிட்டது' எனக்கூறி அழைத்து வந்தனர். 10 வயதுக்குட்பட்ட, ஏழு சிறுமியரை கடவுளாக பாவித்து பாட்டுப்பாடியும், கும்மியடித்தும் வழிபாடு செய்து விரதம் முடித்தனர்.இதுகுறித்து, கிராம மக்கள் கூறியதாவது:மழை பெய்யாததால், வயல்களில் சோளம் கூட பயிரிட முடியாத நிலை உள்ளது. அதனால், கால்நடைகளை வைத்துக்கொண்டு மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறோம். அதனால், எங்களுக்கு எங்களது முன்னோர் சொல்லிக்கொடுத்தது போல், மழைக்கஞ்சி வழிபாடு செய்தோம். அவ்வாறு செய்தால் மழைபெய்யும் என்பது எங்கள் நம்பிக்கை.இவ்வாறு அவர்கள் கூறினர்.