எஸ்.ஐ.ஆர்.,யை வரவேற்கிறோம் முன்னாள் அமைச்சர் தங்கமணி
நாமக்கல், நாமக்கல் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி குறித்த ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை வகித்தார். தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வரும், 4 முதல் டிச., 4 வரை, எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடக்கிறது. இந்த முகாம் நடப்பது மிகவும் நல்லது.காரணம், ஒவ்வொரு பூத்திலும், 30, 40 வாக்காளர்கள் இறந்தவர்களும், அடையாளம் தெரியாத வாக்காளர்களும் உள்ளனர். வெளியூர் சென்றவர்களும் உள்ளனர்.இதுபோன்ற வாக்காளர்களை நீக்கக்கோரி, நாங்கள் பலமுறை வாக்காளர் திருத்த முகாமில் எழுதி கொடுத்தோம். ஆனால், அதை நீக்க மறுத்துக்கொண்டிருந்தனர். தற்போது, தேர்தல் ஆணையமே அந்த பணியை செய்கிறது. எங்களை பொறுத்தவரை மிக நல்ல திட்டம். இதை நாங்கள் வரவேற்கிறோம்.மேட்டூர் அணை, ஏழு முறை நிரம்பி உள்ளது. கடந்த ஒரு வாரமாக, மேட்டூர் இடது, வலது கரை வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை. நெற்பயிர் காய்ந்து கொண்டிருக்கிறது. உடனடியாக இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, அந்த வாய்க்காலில் தண்ணீர் விடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கியபின், 'இ.பி.எஸ்.,ஐ தற்காலிக பொதுச்செயலாளர்' என பேசியிருக்கிறார் என, நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ''அதை என்னவென்று முழுசாக பார்த்துவிட்டு சொல்கிறேன்,'' என, தங்கமணி கூறினார்.முன்னாள் அமைச்சர் சரோஜா, ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், மாநில வர்த்தகரணி இணை செயலாளர் மோகன், மாவட்ட செயலாளர் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.