கொல்லிமலை அருவியில் குளிக்க இன்று தடை விலக்கப்படுமா?
சேந்தமங்கலம்: கொல்லிமலை அருவிகளில், குளிப்பதற்கான தடை ஐந்தாவது நாளாக நீடித்த நிலையில், இன்று தண்ணீர் வருவது குறைந்தால் தடை நீக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.கொல்லிமலையில், பிரசித்தி பெற்ற மாசிலா அருவி, ஆகாயகங்கை நீர் வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இவைகளில் குளிப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் மலைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக கொல்லிமலையில் கன மழை பெய்ததால், அங்குள்ள அருவிகளில் குளிக்க கடந்த, 1ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த தடை நேற்று ஐந்தாவது நாளாக நீடித்த நிலையில், கொல்லிமலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது. இதனால், இன்று (6) அருவிகளில் தண்ணீர் வருவதை பொறுத்து, அருவிகளில் குளிப்பதற்கான தடை விலக்கப்படும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.