குதிரையை தீ மிதிக்க வைத்த வாலிபர் கைது
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை, கிழக்கு தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், சில மாதங்களுக்கு முன் நடந்தது. மண்டல பூஜை முடிந்து, கடந்த மே மாதம், 7ல் திருவிழா நடந்தது. இதில், தீ மிதிக்கும் நிகழ்ச்சியில், அண்ணா காலனியை சேர்ந்த சின்ராஜ் மகன் குமரவேல், 38, என்பவர், தன் குதிரையை தீ மிதிக்க வைத்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, சமூக மற்றும் விலங்கு நல ஆர்வலர் விக்னேஷ் அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குதிரையை பரிசோதனை செய்தபோது காயம் ஏற்படவில்லை எனத்தெரிந்தது. இருப்பினும் விலங்குகள் வதைச்சட்டதின் கீழ், குமரவேலை நாமகிரிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.