குன்னுாரில் 64வது பழக்கண்காட்சி துவக்கம் 150 வகையில் 5.5 டன் பழங்களால் வடிவமைப்பு
குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் துவங்கிய, 64வது பழ கண்காட்சியில், 150 வகைகள 5.5 டன் பழங்களால் பல்வேறு வடிவமைப்புகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனின் நிறைவு நிகழ்ச்சியாக, 64வது பழ கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். 150 வகைகளில், 5.50 டன் பழங்களால் வடிவமைப்புகள் உட்பட பழங்களும் காட்சி படுத்தப்பட்டுள்ளன.அதில்,1.75 டன் கருப்பு திராட்சையில் 6 அடி அகலம் 15 அடி உயரத்தில் 'கிங்காங்' வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கவரும் 'டம்பெல்டக்' மினியன் போன்ற கார்ட்டூன் உருவங்கள், டைனோசர், பிக்காச்சு. நத்தை போன்றவை, 1.50 டன் எலுமிச்சை, திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு செர்ரி மற்றும் பேரிச்சம் பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவுகளில் ரசாயன நச்சுப் பொருட்கள் குறைக்கவும், அனைத்து உயிரினங்களை காப்பாற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும் 'கோ ஆர்கானிக் சேவ் எர்த்' போன்ற வாசகங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களால் வடிவமைக்கப்பட்டது.சிம்ஸ் பூங்காவின், 150வது ஆண்டை முன்னிட்டு, 150 ரக பழங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10 தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் அரங்குகளில் பழங்களால் பல்வேறு வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.தேயிலை வாரியம் டான்டீ மற்றும் தனியார் அமைப்புகளின் அரங்குகளில் தேயிலை துாள், இயற்கை விவசாய பொருட்கள் உட்பட பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த ஆண்டு முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்கு மலர் நாற்றுக்கள் இலவசமாக வழங்கப்பட்டன. கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் பழக்கண்காட்சியை கண்டு ரசித்தனர். நாளை (26ம் தேதி) மாலை பரிசளிப்பு விழாவுடன் பழக்கண்காட்சி நிறைவு பெறுகிறது.