தோடர் கிராமங்களில் சமுதாய கூடம் கட்ட நடவடிக்கை
கோத்தகிரி; கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கோடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட, பேடுகல் மந்து மற்றும் கோடுதேன் மந்து ஆகிய தோடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமங்களில் கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்து, மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.அப்போது, 'பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு கூடுதலாக குழாய்கள் பொருத்தி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்; வளர்ப்பு எருமைகளை பாதுகாக்கும் வகையில், அவைகளை அடைக்கும் பகுதியின் தடுப்பு சுவரை சீரமைத்து தர வேண்டும்,'என, வேண்டுகோள் விடுத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், 'தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என, துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பி.எம்., ஜென்மம் திட்டத்தின் கீழ், கோடுதேன் மந்து பகுதியில், தலா, 5.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர்களுக்கான வீடுகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து, ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கூக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட, பிக்க பத்தி மந்து, கிராம மக்களை சந்தித்த கலெக்டரிடம், 'சமுதாய கூடம் கட்டித் தர வேண்டும்,' என, கோரிக்கை வைக்கப்பட்டது. 'உடனடியாக, 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்ய வேண்டும்,' என, உத்தரவிட்டார்.மேலும், கொரனுார்- பிக்கபத்தி மந்து இடையே, 2 கி.மீ., தொலைவில் நபார்டு திட்டத்தில், 2.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டது.மேலும், பழங்குடியினருக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், தலா, 4.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 5 வீடுகள் இப்பகுதியில் கட்டி தர உறுதி அளிக்கப்பட்டது. ஆய்வு பணியின் போது, துறை அலுவலர்கள் மற்றும கிராம பிரமுகர்கள் உடனிருந்தனர்.