காட்டுத்தீ ஏற்பட்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் செடி கொடிகள் சேதம்
ஊட்டி : ஊட்டியில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீயில், ஒரு ஏக்கர் பரப்பளவில், செடி கொடிகள் எரிந்து சேதமானது.நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலான காலநிலை நிலவுவதால், பூமியில் ஈரப்பதம் குறைந்து, உதிர்ந்த இலை சருகுகள் காய்ந்து காணப்படுகிறது. இதனால், பல பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊட்டி மிஷனரிஹில் பகுதியில், பட்டா நிலத்தில் நேற்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. 'மளமளவென' பரவிய காட்டுத் தீயால், அப்பகுயில் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஒரு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில், ஒரு ஏக்கர் பரப்பளவில் செடி, கொடிகள் எரிந்து நாடமாயின.வனத்துறையினர் கூறுகையில், 'பட்டா நிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ, உடனடியாக அணைக்கப்பட்டது. வறட்சி காரணமாக புல் மற்றும் இலை சருகுகள் காய்ந்து கிடப்பதால், இயற்கையாக தீ ஏற்பட்டதா அல்லது யாராவது தீ வைத்துள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.