நீலகிரியில் அதிக பரப்பில் கேரட் சாகுபடி: ஊட்டி மார்க்கெட்டில் வரத்து குறைவு
ஊட்டி::நீலகிரி மாவட்டத்தில், தேயிலை பிரதான விவசாயமாக உள்ளது. இருப்பினும், விலை வீழ்ச்சி, தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மலை காய்கறி அதிக பரப்பளவில் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக, மாவட்டத்தில் எம். பாலாடா, நஞ்சநாடு, அணிக்கொரை, நெடுகுளா, ஈளாடா, வ.உ.சி., நகர், கட்டபெட்டு மற்றும் கூக்கல்தொறை உள்ளிட்ட பகுதிகளில், அதிக பரப்பளவில் கேரட் பயிரிடப்பட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.விதை, பூச்சி கொல்லி மருந்து மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, அறுவடை செய்யப்பட்ட கேரட் வண்டிகளில் விற்பனை செய்ய லாரி வாடகை, ஏற்று, இறக்கு கூலி மற்றும் மண்டி கமிஷன் உள்ளிட்ட செலவினங்கள் அதிகமாக உள்ளது.இதனால், ஒரு கிலோ கேரட்டுக்கு, 100 ரூபாய் வரை குறையாமல் விலை கிடைத்தால் மட்டுமே, விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். இல்லாத பட்சத்தில் நஷ்டம் தான் அதிகரிக்கும்.தற்போது, மாவட்டத்தில் வறட்சி நிலவினாலும், கூடுமானவரை மோட்டார் பம்ப் உதவியுடன், விவசாயிகள் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். அறுவடை செய்யப்படும் கேரட், 90 சதவீதம் மேட்டுப்பாளையம் மண்டிகளிலேயே விற்பனை செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும் என்பதால், ஊட்டி உள்ளிட்ட உள்ளூர் மார்க்கெட்டில் கேரட் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜாமுகமது கூறுகையில், ''ஊட்டி மார்க்கெட்டில், பீட்ரூட், பீன்ஸ் மற்றும முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளின் வரத்தை விட, கேரட் வரத்து குறைவாக இருப்பது வழக்கம். இதற்கு காரணம், விவசாயிகள் மொத்தமாக மேட்டுப்பாளையம் மண்டிகளில் விற்பதை விரும்புகின்றனர். தற்போது, ஊட்டி மார்க்கெட்டில், ஒரு கிலோ கேரட், 40 முதல், 45 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போது, நாளென்றுக்கு, 1000 கிலோ வரை வரத்து உள்ளது,'' என்றார்.