பந்தலுாரில் காட்டுப்பன்றி தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதி
பந்தலுார்; பந்தலுார் அருகே, கொளப்பள்ளி பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்தவர் குமரன்,39. இவர் காபி தோட்டத்தில் காபி கொட்டைகள் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, தோட்டத்திற்குள் வந்த காட்டுப்பன்றி குமரனை தாக்கியது. அதில், நெஞ்சு உள்ளிட்ட உடலில் காயம் ஏற்பட்ட நிலையில், வனத்துறையினர் மீட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரின் உடலுக்கு பிதர்காடு வனச்சரக உதவி வனப் பாதுகாவலர் சாய்சரண், பறக்கும் படை வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ் உள்ளிட்ட வனத்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அவரது குடும்பத்தாரிடம் வனத்துறை சார்பில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.