வனக்கல்லுாரிக்கு விசிட் அடிக்கும் வெளிநாட்டினர் தங்கி படிப்பதற்கு மாணவர்கள் விருப்பம்
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரிக்கு வெளிநாட்டினர் வருகை அதிகரித்துள்ளது. அந்நாட்டு மாணவர்கள் இங்கு வந்து படிக்கவும், இங்குள்ள மாணவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளன.மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின், வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயக்கி வருகிறது. இங்கு, வனத்துறையின் அடிப்படை மற்றும் பயன்பாட்டு அம்சங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. வனக்கல்லூரியின் தொழில்நுட்பங்களையும், மரம் வளர்க்கும் முறைகள், அதில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும், மிகவும் சிறப்பாக உள்ளதால், குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களிலும் இதுதொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், மரம் வளர்க்கவும் வனக்கல்லூரி உதவியுள்ளது. இந்திய அளவில் வனக்கல்லூரி பிரபலம் ஆன நிலையில், வனக்கல்லூரிக்கு உகாண்டா, பிஜி, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து உயர் அதிகாரிகள், மரம் வளர்ப்பு குறித்து அறிந்து கொள்ள வருகை புரிகின்றனர். இக்கல்லூரிக்கு அண்மையில் பிஜி நாட்டின் ஹை கமிஷனர் ஜெகநாத் சமி, மலேசியா நாட்டின் டிம்பர் வாரியத்தில் இருந்து பத்து பேர் கொண்ட குழுவினர், உகாண்டா நாட்டு குழுவினரும் வருகை புரிந்தனர். இப்படி மேட்டுப்பாளையம் வனக்கல்லூரிக்கு வெளிநாட்டினர் வருகை அதிகரித்துள்ளது.இதுகுறித்து வனக்கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:-நம் வனக்கல்லூரிக்கு கிழக்கு ஆசியா நாடுகளில் வரவேற்பு உள்ளது. உகாண்டா, மலேசியா, பிஜி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், வாரிய குழுவினர் இங்கு வந்து, நம் ஆராய்ச்சிகளையும், மரம் வளர்ப்பு தொழில்நுட்பங்களையும் கண்டு வியக்கின்றனர்.வனக்கல்லூரியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் செயல்பாடுகள் போன்றவை குறித்து இவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தரமான நாற்றுக்களை உருவாக்குதல், தொழில்நுட்பங்களில் உள்ள சவால்கள், அதற்கான தீர்வுகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.பிஜி, மலேசியா, உகாண்டா நாட்டு மக்களுக்கு நம் வனக்கல்லூரியின் தொழில்நுட்பங்களை கொண்டு போய் சேர்க்கவும், அங்குள்ள மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயிலவும், இங்குள்ள மாணவர்கள் அங்கு கல்வி பயிலவும் வந்தவர்கள், விருப்பம் தெரிவித்துள்ளனர். விரைவில் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.