கோவில்களில் குரு பெயர்ச்சி; சிறப்பு ஹோமம்
மேட்டுப்பாளையம் : குரு பெயர்ச்சியை அடுத்து கோவில்களில் ஹோமம், சிறப்பு பூஜைகள் நடந்தன. மேஷ ராசியிலிருந்த குரு பகவான், ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியை ஒட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. கோவை சிவன்புறம் ஆசிரியர் காலனியில் உள்ள, ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில், குரு பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெற்றன. முதலில் மகா கணபதிக்கு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து புண்ணியாவஜனம், கலச ஆவாகனம், பஞ்ச சுத்த ஜபம் ஆகிய பூஜைகள் நடந்தன. அதன் பின் மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், புருஷ சித்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம் செய்யப்பட்டது. தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, 33 திரவியங்களால் ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து மகாபூர்ணாஹுதி, கலசங்கள் கோவிலில் வலம் வந்து, தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், நவகிரகங்களுக்கு அபிஷேகமும் நடந்தது. இந்த குரு பெயர்ச்சி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் லட்சுமி நாராயணன் தலைமையில் குழுவினர் செய்தனர். இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். அன்னுார் மற்றும் கோவில்பாளையத்தில், சிவாலயங்களில் நேற்று குரு பெயர்ச்சி விழாநடந்தது. அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு நேற்று மாலை 4:30 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் நடந்தது. இதையடுத்து அபிஷேக பூஜை நடந்தது. குரு பகவான் உட்பிரகாரத்தில் உலா வந்து அருள்பாலித்தார். மாலை 5 :19 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார். இதையடுத்து குருபகவானுக்கு, மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள் என திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவிலில், நேற்று மதியம் 3:00 மணிக்கு யாக பூஜை துவங்கியது. இதையடுத்து தட்சிணாமூர்த்திக்கு, அபிஷேக பூஜை, கலசபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 5:19 மணிக்கு, குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார்.கோவில்பாளையம், சரவணம்பட்டி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இங்கு லட்சார்ச்சனை தொடர்ந்துஇன்று காலை 8:30 மணிக்கு துவங்கி, நாளை (மே 3ம் தேதி) இரவு 7:00 மணி வரை நடைபெறுகிறது.