மாதிரி இயற்கை காய்கறி சந்தை சுய உதவி குழு பெண்கள் பங்கேற்பு
கூடலுார்,; கூடலுாரில் நடந்த இயற்கை சந்தையில், சுயஉதவி குழு பெண்கள் இயற்கை முறையில் உற்பத்தி செய்த காய்கறிகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.கூடலுார் உழவர் சந்தையில், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், சுய உதவி குழு பெண்களிடம் இயற்கை காய்கறி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், மாதிரி இயற்கை காய்கறி விற்பனை சந்தை நடந்தது. வட்ட மேலாளர் உஷா வரவேற்றார். இயற்கை சந்தையை உதவி அலுவலர்கள் ரவி எல்லப்பன், சாந்தசீலன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.மாதிரி சந்தையில், மசினகுடி, ஸ்ரீமதுரை, முதுமலை, நெலாக்கோட்டை, சேரங்கோடு ஊராட்சிகளை சேர்ந்த சுய உதவி குழு பெண்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்த காய்கறிகளை, காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைத்திருந்தனர்.ஒருகிணைப்பாளர்கள் கூறுகையில், 'சுய உதவி குழு பெண்களிடம் இயற்கை, விவசாயத்தை ஊக்கப்படுத்தும், மாதிரி இயற்கை சந்தை நடத்தப்பட்டது. இதுபோன்ற சந்தை மற்ற பகுதிகளிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.