முழுமை பெறாத கட்டட பணியால் வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்
கோத்தகிரி;கோத்தகிரி பேரூராட்சி அலுவலக வளாகத்தில், முழுமை பெறாத கட்டட பணியால், வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு கட்டடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இடிந்து விழுந்தது. இதனால், அலுவலகத்திற்குள் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.தவிர, தனியார் வாகனங்கள் சாலை ஓரத்தில் நிறுத்த முடியாத நிலை இருந்து வந்தது. நீண்ட நாட்களுக்குப் பின், எஸ்.ஏ.டி.பி.,திட்டத்தில், 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது, பணி நடந்து வருகிறது.பிரதான சாலையில் இருந்து நீடித்து, அலுவலகத்தை ஒட்டி, 9 மீட்டர் உயரம், 18 மீட்டர் நீளத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடப் பணி, விரைவில் நிறைவடையும் நிலை உள்ளது.ஆனால், நீடிக்கப்பட்ட இடத்தில், கட்டடத்திற்காக தோண்டப்பட்ட குழியில் மண் நிரப்பி சமன் செய்யும் பணி, ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மேலும், கட்டுமான பொருட்கள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ளதால், வாகனங்களை நிறுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், குறிப்பிட்ட இடத்தில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இப்பணியை விரைந்து முடித்து, வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்வது அவசியம்.