விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
கூடலுார், ; முதுமலை, மசினக்குடியில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதன் வெளிவட்ட பகுதியான மசினகுடி வனப்பகுதி, புலி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்லுயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள வனவிலங்குகளின் குடிநீர் தேவையை மாயாறு ஆறு, தடுப்பணைகள், தண்ணீர் குட்டைகள் பூர்த்தி செய்து வருகிறது. கடந்த ஆண்டு, பிப்., மாதம் துவக்கத்தில், வன விலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதன்பின், கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட பருவ மழை அதிகம் பெய்ததால், இதுவரை வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால், நடப்பாண்டு கோடை மழை ஏமாற்றி வருவதுடன், இரவு;காலை பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், ஓரிரு வாரங்களில், வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடும் அபாயம் உள்ளது.கவலை அடைந்துள்ள வனத்துறையினர் கோடை மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர். எனினும், சில தடுப்பணைகளின் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.