இதுவரை சம்பளம் வரவில்லை துாய்மை பணியாளர்கள் மனு
ஊட்டி, ; கூடலுார் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், தங்களுக்கான நிலுவை சம்பளம் வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர். கூடலுார் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கேத்தி என்பவர் தலைமையில் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: கூடலுார் நகராட்சியில் துாய்மை பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தோம். 'திடீரென ஒப்பந்தம் ரத்து' என, அறிவித்து ஒரே நாளில், 78 பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தினர். நவ., டிச., ஆகிய இரண்டு மாதங்களாக துாய்மை பணி மேற்கொண்டதற்கு சம்பளத்தை தராமல் நிறுத்தி வைத்துள்ளனர். பணியில் இருந்து நிறுத்தியதால் பொருளாதாரம் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, சம்பளம் வழங்குவதுடன், மீண்டும் பணி வழங்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.