விழாவுக்கு சிறப்பு பஸ்கள்; பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள்
பந்தலுார்; பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடப்பதை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழக, கூடலுார் கிளையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் உள்ளூர் வழித்தடங்களில், இயக்குவதற்கு போதிய பஸ் இல்லாமல் உள்ளதால், உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், பக்தர்கள் சிரமப்படாமல் சென்று வர பஸ்கள் இயக்குவதை விட, வருவாயினை இலக்காக கொண்டு, உள்ளூர் வழித்தடங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்களை சிறப்பு பஸ்களாக இயக்கப்படுகிறது. குறிப்பாக, கூடலுாரில் இருந்து பந்தலுார், குந்தலாடி, பாட்டவயல் வழியாக அய்யன் கொல்லி பகுதிக்கு இயக்கப்பட்ட பஸ், பொக்காபுரத்திற்கு சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டது. இந்நிலையில், கூடலுாரில் இருந்து வந்த பஸ் பொன்னானி பகுதியில் பழுதடைந்து நடுவழியில் நின்றது. இதனால், மாநில எல்லை பகுதிகளான பாட்டவயல் மற்றும் அய்யன் கொல்லி உள்ளிட்ட, 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பயணிகள் மற்றும், கேரளா உள்ளிட்ட வெளியூர் பகுதியில் சென்று மாலையில் வீடு திரும்ப வேண்டிய பயணிகளும் பஸ் கிடைக்காமல் சிரமப்பட்டனர். நடுவழியில் பஸ் பழுதடைந்து இருந்ததால் கனரக வாகனங்களும் செல்ல முடியாத நிலை உருவானது. பொது மக்கள் கூறுகையில், 'வரும் காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவதானால், வேறு கிளைகளில் கூடுதலாக உள்ள பஸ்களை பெற்று இயக்க வேண்டும். உள்ளூர் பயணிகள் பாதிக்காத வகையில், பஸ்களை இயக்க வேண்டும்,' என்றனர்.