புதிய கடைகள் கட்டும் பணி குன்னுாரில் திடீர் ஆலோசனை
குன்னுார்,; குன்னுாருக்கு வந்த நகராட்சிகளின் மண்டல இயக்குனரிடம், கடைகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வியாபாரிகள் மனு கொடுத்தனர்.குன்னுார் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடித்து, 41.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'பார்க்கிங்' வசதியுடன் புதிய கடைகள் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.இந்நிலையில், நேற்று குன்னுார் நகராட்சி அலுவலக அரங்கில், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம், நகராட்சிகளின் மண்டல இயக்குனர் இளங்கோவன் தலைமையில் நடந்தது.அப்போது, மார்க்கெட்டில் உள்ள காய்கறி, இறைச்சி கடைகள் உட்பட, 10 சங்கங்களை சேர்ந்தவர்கள் மனுக்களை அளித்தனர். வியாபாரிகள் பேசுகையில், 'ஆன்லைன் வர்த்தகத்தால் பாதித்த நிலையில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடைகள் நடத்துகிறோம். இந்நிலையில், குன்னுாரில், 3 பக்கம் ஓடை உள்ள மார்க்கெட்டில், தரைமட்டத்தின் கீழ் பார்க்கிங் தளம் அமைத்து மேற்பகுதியில் கடைகள் அமைப்பது வெள்ள சேதத்திற்கு வாய்ப்பாக மாறும். 800 கடைகள் இருந்த இடத்தில், 570 கடைகள் கட்டுவதால், நகராட்சியின் வருவாயும் பாதிக்கும். எனவே, மார்க்கெட் கடை கட்டுமானம் குறித்து மறு பரிசீலனை செய்ய அதிகாரிகள் முன் வர வேண்டும்,' என்றனர்.நகராட்சிகளின் மண்டல இயக்குனர் இளங்கோவன் கூறுகையில், ''சமவெளி பகுதிகளில் காய்கறி கடைகள் மட்டுமே இருக்கும். இங்கு ஜுவல்லரி, மொபைல் கடைகள் உட்பட,10 வகையான கடைகள் உள்ளன. உங்கள் மனுக்களை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, கமிஷனர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்,'' என்றார்.கூட்டத்தில், மண்டல பொறியாளர் சேமக்கனி, கமிஷனர் இளம்பரிதி, நகராட்சி தலைவர் சுசீலா, துணை தலைவர் வாசிம் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.