உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடரும் கடும் வறட்சியால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு!அவசர நடவடிக்கை இல்லையெனில் பாதிப்பு நிச்சயம்

தொடரும் கடும் வறட்சியால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு!அவசர நடவடிக்கை இல்லையெனில் பாதிப்பு நிச்சயம்

கூடலுார்: முதுமலை, மசினகுடியில், தொடரும் வறட்சியில் கால்நடைகளுக்கு கடும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி, மாயார், பொக்காபுரம், மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் காய்கறி உற்பத்தியுடன் நாட்டு மாடுகள் மற்றும் எருமை வளர்ப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு, தற்போது, 5,000க்கும் மேற்பட்ட நாட்டு மாடுகள், நுாற்றுக்கணக்கான எருமைகள் வளர்க்கப்படுகிறது. இவைகளை குடியிருப்யை ஒட்டிய வனப்பகுதி மற்றும் அரசு நிலங்களில், விவசாயிகள் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.சீசன் காலங்களில், 1,500 லிட்டர் வரை பால் உற்பத்தி செய்யப்பட்டு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு, பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகம் பெய்த நிலையில், 'நடப்பு ஆண்டு வறட்சியின் தாக்கம் அதிகம் இருக்காது,' என, விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், கோடை மழை ஏமாற்றி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து மேய்ச்சல் பகுதிகளில் பசுமை இழந்து, கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு, 200 லிட்டர் பால் கூட கிடைப்பதில்லை. கடும் வறட்சி தொடர்ந்தால், உணவின்றி கால்நடைகள், உயிரிழக்கும் ஆபத்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மசினகுடி பால் உற்பத்தியாளர் சங்க, முன்னாள் தலைவர் சக்தி கூறுகையில், ''மசினகுடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில், ஒரு காலத்தில், 50 ஆயிரம் நாட்டு மாடுகள் இருந்தன. காலநிலை மாற்றம் மற்றும் வறட்சியின் காரணமாக தற்போது, 5,000 நாட்டு மாடுகள் மற்றும் சில நுாறு எருமைகள் மட்டுமே உள்ளன. கால்நடைகளுக்கு, அரசின் சார்பில் மானிய விலையில் புண்ணாக்கு வழங்கி வந்தனர். கடந்த எட்டு மாதமாக அதனையும் நிறுத்தி விட்டனர். தற்போது வறட்சியின் காரணமாக கால்நடைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் மாடுகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்படும். எனவே, மானிய விலையில் புண்ணாக்கு வழங்குவதுடன், கால்நடைகளுக்கு தேவையான பசுந் தீவனங்களை அரசு இலவசமாக வழங்க வேண்டும்,'' என்றார்.

நிபந்தனைகளை தளர்த்த நடவடிக்கை

கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொ) திருமூலன் கூறுகையில், ''கோடையில் கால்நடைகளுக்கு உணவு தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்தும், கர்நாடகாவில் இருந்து, விவசாயிகள் வைக்கோல் எடுத்து வருவதற்கு, கர்நாடக அரசு துறை விதித்துள்ள நிபந்தனைகளை அகற்றுவது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, கால்நடை பராமரிப்பு துறை சார்பில், விவசாயிகளின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் சமீபத்தில் ஊட்டியில் நடத்தப்பட்டது. அதில் மூன்று பேர் மட்டும் பங்கேற்ற தால், கூட்டத்தை மற்றொரு நாளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில் விவசாயிகளின் தேவைகளை அறிந்து, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை