புலிகளை விஷம் வைத்து கொன்ற மூன்று பேர் கைது
பந்தலுார்;நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தனியார் தேயிலை தோட்டத்தில் கடந்த, 20ம் தேதி, சாலை ஓரத்தில் 2 வயது ஆண் புலி, புதர் பகுதியில் 9 வயது பெண் புலி பலியாகி கிடந்தன.கூடலுார் வன அலுவலர் ஆய்வு செய்தபோது, அங்கு காட்டுப்பன்றி ஒன்றும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. பன்றியின் உடலை பிரேத பரிசோதனை செய்தபோது, மரவள்ளிக் கிழங்கு, அரிசி ஆகியவற்றில் விஷம் வைத்து கொல்லப்பட்டது உறுதியானது.தொடர்ந்து, உயிரிழந்த புலிகளின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அவற்றின் இரைப்பையில் உயிரிழந்த காட்டுப்பன்றியின் இறைச்சி இருந்ததால், இரண்டு புலிகளும் உயிரிழந்தது தெரியவந்தது.வனக்குழுவினர், எஸ்டேட் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், வட மாநிலத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள், தங்கள் போனில் இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் உடலை புகைப்படம் எடுத்து வைத்திருந்தது தெரிய வந்தது.அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், காட்டுப்பன்றிக்கு விஷம் வைத்ததை ஒப்புக்கொண்டனர். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சூரியநாத் பராக், 35, அமன்கொயாலா, 24, சுபித்நன்வார், 25, ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.