| ADDED : மே 28, 2024 12:12 AM
கூடலுார்;கூடலுார் அருகே கழிப்பிட பராமரிப்பாளர் மீது தாக்குதல் நடத்திய மூவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மேல் கூடலுாரை சேர்ந்தவர் இளங்கோ,48. இவர், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட் வனச்சோதனை சாவடி அருகே உள்ள, நகராட்சி கழிப்பிடத்தில் தற்காலிக பராமரிப்பு பணியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, 2023 மார்ச் 13ம் தேதி இரவு 10:00 மணிக்கு இவர் கழிப்பிடத்தை பூட்டிவிட்டு வெளியே வந்துள்ளார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த, கூடலுாரை சேர்ந்த அஜித், 26, சேம்பாலாவை சேர்ந்த விஜயகுமார், 26, ஓவேலி பாலவாடியை சேர்ந்த குணசேகரன்,25, ஆகியோர் அப்பகுதிக்கு வந்துள்ளனர்.'இந்நேரம் இப்பகுதியில் என்ன வேலை,' என, அவர்களிடம் இளங்கோ கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், மூவரும் இளங்கோவனை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்; இளங்கோ காயமடைந்தார்.கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரணை செய்த மாஜிஸ்திரேட் சசின்குமார், குற்றவாளிகள் அஜித், விஜயகுமார், குணசேகரன் ஆகியோருக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.