மேலும் செய்திகள்
இரண்டு மாதமாகியும் சீருடை வழங்கல!
02-Aug-2024
பந்தலுார்:-பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் பழங்குடி குழந்தைகள் கல்விப்பயில, வழி துணையாளர்களுடன், வாகன வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதால் இடைநிற்றல் குறைந்து வருகிறது.நீலகிரி மாவட்டம், வனம்; அதனை சார்ந்த கிராமங்கள்; தேயிலை மலை காய்கறி தோட்டங்கள் உள்ளடக்கிய பகுதிகளாக உள்ளது. அதில், பெரும்பாலான கிராமங்களுக்கு, சாலை வசதிகள் இருந்தாலும், போக்குவரத்து வசதிகள் இதுவரை இல்லை. அதில், பழங்குடியினர் வாழும் கிராமங்கள் இன்றளவும் எவ்வித அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளன.-----இதனால், பெரும்பாலான கிராம குழந்தைகள் பள்ளி சென்று கல்வியறிவு பெற முடியாமல் உள்ளனர். இதனை தவிர்க்க, அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், வனப்பகுதிகள் மற்றும் வாகன வசதிகள் இல்லாத பகுதிகளில் இருந்து, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வர, வழி துணையாளர்கள் மற்றும் வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்தறிவுக்கு புதிய வழி
-----அதில், பந்தலுார் அருகே, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய பாலாபள்ளி மற்றும் கரும்பன் மூலா ஆகிய கிராமங்களில் இருந்து, மக்கள் வெளியில் வந்து செல்ல சாலை வசதி இருந்த போதும், வாகனங்கள் ஏதும் இந்த பகுதிகளுக்கு செல்வதிலல்லை.சாலையை ஒட்டி முதுமலை வனம் அமைந்துள்ளதால், எந்த நேரத்திலும் புலி, கரடி, யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வந்து செல்லும். இதனால் பகல் நேரங்களில், மக்கள் வெளியில் நடந்து செல்ல அச்சப்படும் நிலை உள்ளது.இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்வதற்காக, வாகன வசதி ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. காலையில் வாகனங்களில் பயணிக்கும் மகிழ்ச்சியில், பழங்குடியின குழந்தைகள் எழுந்து குளித்து, சீருடை அணிந்து தங்களுக்காக வரும் பள்ளி வாகனத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். வழித்துணையாளர் நியமனம்
இதே போல், புலிகள் காப்பகத்தின் உட்பகுதியில் உள்ள, பென்னை கிராமத்தில் வாழும் பழங்குடியின மக்கள், 2- கி.மீ., துாரம் நடைபாதை வழியாகவே வர வேண்டும். இந்த பகுதியில் எந்த நேரத்திலும் வனவிலங்குகள் உலா வருவதால், இங்குள்ள பள்ளி மாணவர்கள் வருவது என்பது இயலாத காரியம்.இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, 2 கி.மீ., துாரம் அவர்களை வாகனம் வரை அழைத்து செல்ல, கல்வி துறை சார்பில் வழித்துணையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் பள்ளி செல்லும் மாணவர்களை காலையில் அழைத்து வந்து, மாலையில் வீடுகளுக்கு கொண்டு போய் விடுகின்றனர். வரும் வழியில் வனவிலங்கு ஏதும் உள்ளதா என்பது குறித்து, வனத்துறை பணியாளர்களிடம் விபரம் கேட்டு பள்ளி மாணவர்களை அழைத்து வருகின்றனர். கை கோர்க்கும் தலைமை ஆசிரியர்
------மறுபுறம், பென்னை அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன், கிராமங்களுக்கு சென்று பழங்குடியின பெற்றோரை சந்தித்து, கல்வி தடைபடாமல் இருக்க அறிவுரை கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்தி, வாகன வசதிகள் இருப்பது குறித்து விளக்கி வருகிறார். இதனால், வனப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவர்களின் கல்வி பாதிக்காமல், நாள்தோறும் பள்ளிக்கு வரும் நிலை உருவாகி உள்ளது. மேலும், காலையும்; மாலையும் இவர்கள், பாதுகாப்புடன் வாகனத்தில் கல்விச்சுற்றுலா செல்வது போன்ற மகிழ்ச்சியுடன் பயணித்து வருவது, பழங்குடியினர் மத்தியல் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
------பழங்குடியினர் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தால், 'கூடலுார் கல்வி மாவட்டத்தில், 3292; ஊட்டியில், 1,087; குன்னுார் கல்வி மாவட்டத்தில், 673; கோத்தகிரியில், 1098 மாணவர்கள்,' என, மொத்தம், 6,150 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இதுபோல், வாகன வசதி இல்லாத, அனைத்து கிராமங்களுக்கும் அரசு, வழித்துணையாளர்கள் மற்றும் வாகனங்களை ஏற்பாடு செய்தால், பழங்குடியினர் அனைவரும் சிறப்பான கல்வி பெற்று வாழ்வில் முன்னேற வாய்ப்பு ஏற்படும்.
02-Aug-2024