நிலுவையின்றி குடிநீர் கட்டணம் வசூலிக்க வார் ரூம் துவக்கம்
பாலக்காடு,; நடப்பு நிதியாண்டு இறுதிக்குள், போர்க்கால அடிப்படையில் தண்ணீர் கட்டண நிலுவை தொகை முழுவதும் வசூலிக்க, குடிநீர் ஆணையம் முடிவு செய்துள்ளது.பாலக்காடு வட்டம், குடிநீர் ஆணையம் இதற்காக 'வார் ரூம்' (வாட்டர் அமவுண்ட் ரெக்கவரி ரூம்) அமைத்துள்ளது. இதன் வாயிலாக, குடிநீர் கட்டணம் வசூலிக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.இதுகுறித்து, குடிநீர் ஆணைய மேற்பார்வை பொறியாளர் சுரேந்திரன் கூறியதாவது:குடிநீர் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்கள், உடனடியாக கட்டணத்தை செலுத்தாவிட்டால், மார்ச் 1ம் தேதி முதல் இணைப்பு துண்டிக்கப்பட்டு, வருவாய் வசூல் செய்வதே இந்த 'வார் ரூமின்' நோக்கமாகும்.அதனால், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் உட்பட, அனைத்து வாடிக்கையாளர்களும், வரும், 28ம் தேதிக்குள் குடிநீர் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அறிவிப்பின்றி குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டும்.தற்போது, பில்கள் தொடர்பாக புகார்களைப் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களும் குறிப்பிட்ட தேதிக்கு முன், தொடர்புடைய அதிகாரிகளிடம் பிரச்னைக்கு தீர்வு கண்டு, கட்டணம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.