எல்லையில் சேதமடைந்த சாலை; கற்கள் பதிக்கும் பணி துவக்கம்
கூடலுார்; கூடலுார் நாடுகாணியில் இருந்து கேரளாவுக்கு சாலை பிரிந்து செல்கிறது. தமிழக -கேரளா - கர்நாடகாவை இணைக்கும் இச்சாலையில், வருவாய் துறையினர், நுழைவு வரி வசூல் மையம் அமைத்துள்ளனர்.கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் பிற மாவட்ட, மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். அதில், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரை, 6 கி.மீ., சாலை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இப்பகுதியில், வாகனங்கள் இயக்க சுற்றுலா பயணிகள்,வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சாலையை தரமாக சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சாலையில் அடிக்கடி வாகனம் பழுதாகி போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஓட்டுனர்கள், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், முதல் கட்டமாக இச்சாலையில் மிக மோசமான நிலையில் சேதமடைந்துள்ள பகுதியில், 4 இடங்களில் இன்டர்லாக் கற்கள் பதிக்க நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, சேதமடைந்த பகுதிகளில் மட்டும், பொக்லைன் உதவியுடன், தார் சாலை அகற்றப்பட்டு, இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணி துவக்கப்பட்டது.இதனை வரவேற்றுள்ள ஓட்டுனர்கள், 'சேதமடைந்த பகுதிகளில், இன்டெர்லாக் கற்கள் அமைக்கும் பணி தரமாக மேற்கொள்ள வேண்டும். மேலும், பருவமழைக்கு முன், சேதமடைந்த சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.