குறை தீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட 100 மனுக்கள்; உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
ஊட்டி; ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம், கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில் நடந்தது. பொதுமக்களிடமிருந்து 100 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதில், நீலகிரி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்க, குன்னுார் கிளை சார்பில் அளித்துள்ள மனு: குன்னுார் நகராட்சியில் துாய்மை பணியாளர்கள் மகப்பேறு ஆயாக்கள், துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் பணியாற்றி வருகிறோம். கடந்த, 2012ம் ஆண்டு செப்., மாதம், 90க்கும் மேற்பட்டோர் ஊட்டியில் உள்ள துப்புரவு தொழிலாளர் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தின் வாயிலாக கடன் பெற்றுள்ளோம். மாதந்தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. பெற்ற தொகைக்கு மேல் மூன்று மடங்கு வட்டியை கூடுதலாக செலுத்தியுள்ளோம். எங்கள் கடன் இதுவரை தீரவில்லை. 'பிடித்தம் செய்த தொகை வட்டிக்கு சரியாகிவிட்டது,' என, தெரிவிக்கின்றனர். எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் போது ஓய்வூதிய பலன்கள் அனைத்தையும் கடனுக்காக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, வட்டி தொகையை தள்ளுபடி செய்து, நாங்கள் வாங்கிய கடனுக்கு அசல் தொகையை மட்டும் பிடித்தம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னுார் சப்-கலெக்டர் சங்கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.
படைவீரர்களுக்கு நிதி உதவி
முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், முன்னாள் படைவீரர் ராமன் என்பவருக்கு, கண் கண்ணாடி வழங்கப்பட்டது. உயிரிழந்த ராஜ்குமார் அவர்களின் ஈம சடங்கு நிதி உதவி, 10 ஆயிரம் ரூபாய்க்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது. வருவாய் துறை சார்பில் குன்னுார் வட்டம் எடச்சேரி பங்களா அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த,பழைய மருத்துவமனை லைன் பகுதியை சேர்ந்த அப்துல் கனி என்பவரின் வாரிசுதாரரான அப்துல்லா என்பவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. பந்தலுார் வட்டம், சேரங்கோடு கிராமத்தில், நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜ்குமார் என்பவரின் தாயார் சிவபாக்கியத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பெறுவதற்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.