கடந்த இரு ஆண்டுகளில் எடை குறைந்து பிறந்த 1,000 குழந்தைகள்! சிறு வயது திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு காரணம்
ஊட்டி; நீலகிரியில் கடந்த இரண்டு ஆண்டுகளில், 1000 குழந்தைகள் எடை குறைவாக பிறந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட சுகாதார துறை கட்டுப்பாட்டில், 62 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 27 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 35 கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. சுகாதார நிலையங்களில் குழந்தைகள் பிறப்பு விதிகளின் படி, 2 முதல் 2.5 கிலோ எடையில் குழந்தைகள் பிறக்க வேண்டும்; அதற்காக முறையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். மாதந்தோறும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது. எடைகுறைவாக 1,000 குழந்தைகள் இந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், 1 முதல் 1.25 கிலோவில், 1000 குழந்தைகள் பிறந்துள்ளதாக, சுகாதார துறையினர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை அறிந்த மாவட்ட நிர்வாகம்; மாவட்ட சுகாதார துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, முதற்கட்டமாக, மாவட்ட நிர்வாகம், சுகாதார துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்துள்ளது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''நீலகிரியில் குறிப்பாக, கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குன்னுார் வட்டங்களில், 1.25 கிலோ எடை கொண்ட, 1,000 குழந்தைகள் பிறந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மலை மாவட்டத்தில் நடக்கும் சிறு வயதில் திருமணம், ஊட்டச்சத்து குறைபாடு; பிற மாநிலங்களில் இருந்து இடப்பெயர்ந்து வந்து, தேயிலை தோட்டம், கட்டட பணிகள், விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இத்தகைய குறைபாடு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த குறைப்பாட்டை தடுக்கும் வகையில், மாவட்ட சுகாதாரத்துறை, குழந்தைகள் நலத்துறை, சமூக நலத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்களை ஒன்றிணைத்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விரைவில் குழு அமைக்கப்படும். அங்குள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்,'' என்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், ''கடந்த, 2023-24 ம் ஆண்டில் மாவட்டம் முழுவதும், 6,500 குழந்தைகள் பிறந்தது. 2024-25ம் ஆண்டில், 5,900 குழந்தைகள் பிறந்துள்ளது. அதில், 1,000 குழந்தைகள் எடைக்குறைவாக பிறந்தது தெரியவந்துள்ளது. தற்போது, மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனை படி, குறைபாடுகளை கண்டறிந்து தீர்வு காண, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்,'' என்றார்.