நீலகிரியில் முதற்கட்டமாக 11 மருந்தகங்கள்; கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் ஆய்வு
ஊட்டி; மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள 'முதல்வர்' மருந்தகங்களின் கட்டமைப்பு வசதிகளை கூட்டுறவுத் துறை கூடுதல் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார். கடந்தாண்டு, 'பொது பெயர் மருந்துகள்; பிறவகை மருந்துகளும் குறைந்த விலையில், பொது மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் மாநிலம் முழுவதும்,1000 'முதல்வர்' மருந்தகங்கள் அமைக்கப்படும்,' என, மாநில அரசு அறிவித்தது.'முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்,' என, அறிவிக்கப்பட்டது. நீலகிரியில் கூட்டுறவுத் துறை சார்பில், 9 முதல்வர் மருந்தகங்கள், தனி நபர்கள் மூலம் இரண்டு முதல்வர் மருந்தகங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த மருந்தகங்களை கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் பிருந்தா பார்வையிட்டார். ஆய்வின் போது, 'மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள முதல்வர் மருந்தகங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை விரைந்து முடிக்க வேண்டும்,' என, அறிவுறுத்தினார். முதல்வர் மருந்தகங்களுக்கு மருந்துகளை கொள்முதல் செய்து வழங்கும் பணிக்கான முதல்வர் மருந்தக சேமிப்பு கிடங்கினையும் ஆய்வு செய்தார். விண்ணப்பிக்க அழைப்பு
'முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ள தொழில் முனைவோர், www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பிப்.,5 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டது. மருந்தகத்திற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு அரசு, 1.50 லட்சம் ரூபாய் மற்றும் மருந்து கொள்முதல் செய்ய, 1.50 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்யப்படுகிறது. ஆய்வின் போது,நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன்உட்பட பலர் உடன் இருந்தனர்.