20 நிமிட நிகழ்ச்சிக்கு 3 மணி நேரம் தாமதம்; நொந்து போன அதிகாரிகள்
ஊட்டி: ஊட்டியில் ஆவின் நிறுவன நிகழ்ச்சிக்கு அரசு தலைமை கொறடா தாமதமாக வந்ததால் அதிகாரிகள் நொந்து போயினர். ஊட்டி ஆவின் நிறுவனத்தில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியம் கட்டுப்பாட்டில், 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ' சீஸ் பிளான்ட்' கட்டப்பட்டது. இந்த பிளான்டை நேற்று காலை, 10:30 மணிக்கு அரசு தலைமை கொறடா ராமசந்திரன் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்தனர். தாமதமாகி கொண்டே இருந்த நிலையில் கொறடா நிகழ்ச்சிக்கு வரவில்லை. திடீரென நிகழ்ச்சி, 12:00 மணிக்கு துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. 12:00 மணியும் கடந்த நிலையில் கொறடா ராமச்சந்திரன் வராததால் காத்திருந்த அதிகாரிகள் பல பணிகளுக்கு இடையே நொந்து போய் அங்கேயே வேறு வழியின்றி அமர்ந்திருந்தனர். அப்போது, மாநில அரசின் சாதனைகளை காணொளியில் காண்பித்து பொழுதை போக்கினர். பகல், 1:05 மணிக்கு நிகழ்ச்சி மேடைக்கு தலைமை கொறடா ராமச்சந்திரன் வந்து,'சீஸ் பிளான்டை' திறந்து வைத்து மதியம், 1:25 மணிக்கு நிகழ்ச்சியை முடித்து, 20 நிமிடத்தில் வெளியேறினார். 'தாமதம் குறித்து முன்பே தெரிவித்திருந்தால், 3 மணிநேர அரசின் மாவட்டம் சார்ந்த பணிகளை நிறைவு செய்திருப்போம்,' என, சில அரசு அதிகாரிகள் பேசியபடி சென்றனர்.