மலையில் குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்டம் முழுவதும் 3,756 சி.சி.டி.வி., கேமராக்கள்...! சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு தீவிரம்
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், ஐந்து போலீஸ் டிவிஷன்களுக்கு, உட்பட்ட எல்லைகளில், 3,756 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 'ஊட்டி, குன்னுார், கூடலுார், தேவாலா, ஊட்டி ரூரல் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளில் போலீஸ் ஸ்டேஷன், அனைத்து மகளிர் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், கேம்ப் ஆபீஸ்,' என, 40 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, 'கன்ட்ரோல் ரூம், மாவட்ட குற்றப்பிரிவு, மதுவிலக்கு, ஆயுதபடை, ஸ்பெஷல் பிராஞ்ச்,'என, 8 போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுகிறது. மேற்கண்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 620 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களை இணைத்து கிராமங்கள் தோறும் போலீசார் நியமனம் செய்து, குறைகளை கேட்டு வருகின்றனர். பள்ளி, கல்லுாரிகளையும் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இணைப்பு சாலை அதிகரிப்பு
நீலகிரியில் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் இணைப்பு சாலைகள் அதிகரித்துள்ளன. இரவு, பகல் நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கையும் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில், 'குற்ற சம்பவங்களை தடுக்க, வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள், சுற்றுலா மையங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் கட்டாயம் பொருத்த வேண்டும்,' என, போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, நகருக்கு அடுத்தபடியாக குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுக்கும் நோக்கில் கிராமங்களில் இணைப்பு சாலை சந்திப்பு பகுதிகளில், வாகனங்களை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.நீலகிரி எஸ்.பி., நிஷா கூறுகையில்,'' சர்வதேச சுற்றுலா மையமான, நீலகிரி மாவட்டம் முழுவதும், அந்தந்த போலீஸ் டிவிஷனுக்கு உட்பட்ட இடங்களில் குற்ற சம்பவங்களை தடுக்க சி.சி.டி.வி.,கேமராக்களின் அவசியம் குறித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, தேவையான அளவு மக்களின் உதவியுடன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, சீசன் துவங்கியிருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும், குற்றவாளிகளை கண்காணிக்கவும் கேமரா பெரும் உதவியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
சி.சி.டி.வி., கேமராக்கள் விபரம்!
மாவட்டத்தில், 'போலீஸ் டிவிஷன் வாரியாக, ஊட்டி டவுன், - 880; ஊட்டி ரூரல், 395; குன்னுார், -1862; கூடலுார்,- 368; தேவாலா, -251 கேமராக்கள்,' என, மாவட்டம் முழுவதும், 3,756 சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதை கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள்; வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது,' என, போலீசார் தெரிவித்தனர்.