உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க 41 மருத்துவ குழுக்கள்! அவசர காலங்களில் தங்க வைக்க, 483 முகாம்கள் தயார்

மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க 41 மருத்துவ குழுக்கள்! அவசர காலங்களில் தங்க வைக்க, 483 முகாம்கள் தயார்

பந்தலுார்: நீலகிரி மாவட்டத்தில் மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 483 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற, 41 மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். நடப்பு ஆண்டு மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில், நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.இதனால், அனைத்து பகுதிகளிலும் மழையின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், 'நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்,' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

483 தற்காலிக முகாம்கள்

மழையின் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தில், மொத்தம், 483 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மாவட்ட வழங்கல் துறை சார்பில் அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களும், அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், குளிர் மாவட்டமான நீலகிரியில், மழையின் தாக்கத்தால் காய்ச்சல் உட்பட பிற நோய் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றும் முக்கிய பணியில், மாவட்ட சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளனர். அக்குழுவினர் மருத்துவ பணிகளுக்காக 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.

41 மருத்துவ குழுவினர்

சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் சோமசுந்தரம் கூறியதாவது:மாவட்டத்தில், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படும் நிலையில், டாக்டர்கள் தலைமையில், 37 மருத்துவ குழுவினரும், 'வட்டார அளவில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தலா ஒரு குழு,' என, 4- குழுக்கள் என மொத்தம், 41 மருத்துவகுழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.இவர்களை தவிர, மழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது குறிப்பிட்ட பகுதிக்கு உடனடியாக சென்று, நிவாரண குழுவினருடன் இணைந்து மருத்துவ சேவை ஆற்றுவதற்காக, 22 'மொபைல்' மருத்துவ குழுவும் தயாராக உள்ளனர். அந்தந்த பகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள், செவிலியர் பணியில் உள்ளதுடன், பாம்புக்கடி உள்ளிட்ட ஏதேனும் அவசர சிகிச்சை இருந்தால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உடனடியாக பயன்படுத்த ஏதுவாக வைக்கப்பட்டு உள்ளதுடன், அனைத்து வகை மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மக்கள், தண்ணீரை தொடர்ச்சியாக, 10 நிமிடம் கொதிக்க வைத்து அதனை பருக வேண்டும். குளிர்ந்த நீரை பருகினால் பல்வேறு நோய்கள் ஏற்படும். முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து நாள்தோறும் ஆய்வு கூட்டம் நடத்தி ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. மக்கள் அவசர காலங்களில், 1077 என்ற எண்ணை அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ