கோத்தகிரியில் 5 நாள் நடந்த புத்தக திருவிழா நிறைவு
கோத்தகிரி; கோத்தகிரியில் புத்தக திருவிழா-2025 நிறைவு பெற்றதை அடுத்து, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், லயன்ஸ் கிளப் மற்றும் கோத்தகிரி கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில், கோத்தகிரியில், ஐந்து நாட்கள் புத்தகத் திருவிழா நடந்தது. அதில், பள்ளி மாணவர்களுக்கு கோளரங்கம் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், பல்லாயிரம் புத்தகங்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன. இதனை நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன், கண்டுக்களித்ததுடன், புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதன் நிறைவு விழா நடந்தது. வாசகர் வட்ட தலைவர் கோபால் வரவேற்றார். லயன்ஸ் கிளப் தலைவர் மாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தொழிலதிபர் போஜராஜன் பேசுகையில், ''உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அது போல மனதுக்கும் புத்தகம் வாசிப்பு அவசியம்,'' என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ, சிறப்பு கருத்தாளராக பங்கேற்று பேசியதாவது: புத்தக திருவிழாவில், 5,000 மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. கோளரங்கம் நிகழ்ச்சியை, 3,000 மேற்பட்ட மாணவர்கள் கண்டுக்களித்துள்ளனர். இதன் மூலம், மாணவர்கள் வாசிப்பை நேசிக்க விழிப்புணர்வு பெற்றுள்ளனர்,'' என்றார். வாசகர் வட்ட செயலாளர் ஆசிரியர் ராஜ்குமார் நன்றி கூறினார்.