ஊட்டி, குன்னுாரில் காட்டுத்தீ : 6 ஏக்கர் பாதிப்பு
ஊட்டி; ஊட்டி, குன்னுாரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 6 ஏக்கர் பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் வறட்சி அதிகரித்து வருவதால், வனத்தீ பாதிப்புகள் ஏற்பட்டால் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. எனினும், அவ்வப்போது ஆங்காங்கே லேசான காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், ஊட்டி மார்லிமந்து அணையை ஒட்டி உள்ள, நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியில் நேற்று காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. ஊட்டி வனச்சரகத்தை சேர்ந்த வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காட்டுத்தீயை அணைக்க முயற்சி செய்தனர். காற்று வீசியதால் தீ பரவி, 5 ஏக்கரில் இருந்த முட்செடிகள், புற்கள், மரங்கள் எரிந்து சாம்பலாகின. வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். குன்னுார்
இதே போல, குன்னுார் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், ஆங்காங்கே வனத்தீ ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கேத்தி அருகே கீழ் ஒடையரட்டி கிராமத்தில் உள்ள வருவாய் துறை இடத்தில் தீப்பிடித்துள்ளதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு துறையினர், மலை 6:30 மணிக்கு அப்பகுதிக்கு சென்று, ஒரு ஏக்கர் பரப்பளவில் பரவிய தீயை இரவு, 8:30 மணி வரை இரண்டு மணி நேரம் போராடி அணைத்தனர். அதில், தேயிலை வருவாய் துறையின் இடத்திலிருந்த செடிகள், கொடிகள், சிறிய மரங்கள், தேயிலை செடிகள் ஒரு ஏக்கர் பரப்பில் எரிந்து சேதமாகியது.மக்கள் கூறுகையில், 'கடந்த ஆண்டு கோடை காலத்தில் வனத்தீ ஏற்பட்ட போது, தீ வைக்கும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, தீ பரவிய பகுதிகளுக்கு அரசு துறையினர் வரவில்லை. இதனால், அரசு இடங்களில் தீ வைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யும் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.