உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இயற்கை முறையில் தேயிலை உற்பத்தி செய்தால் நல்ல எதிர்காலம்! மாவட்ட சுய உதவி குழுக்களுக்கு வாரியம் அழைப்பு

இயற்கை முறையில் தேயிலை உற்பத்தி செய்தால் நல்ல எதிர்காலம்! மாவட்ட சுய உதவி குழுக்களுக்கு வாரியம் அழைப்பு

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில், இயற்கை முறையில் தரமான பசுந்தேயிலை வழங்கி, சிறந்த துாளை உற்பத்தி செய்ய, தேயிலை உற்பத்தி சங்கங்கள் மற்றும் சுய உதவி குழுக்கள் முன்வர தேயிலை வாரியம் அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள, சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை தேயிலை வாரியம் மூலமாக, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில், சுய உதவி குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் சங்கங்கள் பயன்பெற, தோட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, வேளாண் உபகரணங்கள், வாகனங்கள் வாங்க மானியம் அளிக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி இடுபொருட்கள் வாங்க சுழல் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

மேம்பாட்டு பணிக்கு ரூ.30 கோடி

மேலும், தேயிலை மேம்பாடுக்காக நடப்பாண்டு, 30 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. சுய உதவி குழுக்கள் மற்றும் உற்பத்தி சங்கங்களுக்கு, 20 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், 185 சுய உதவி குழுக்களுக்கு, 13.5 கோடி ரூபாய் வழங்ப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும், 6.5 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இதுவரை இல்லாத அளவு கல்வி உதவித்தொகை, 1.60 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியது. முதல் முறையாக அதிகபட்சமாக, 1,030 குழந்தைகளுக்கான பணம் வங்கி கணக்கில் வழங்கப்பட்டது. தேயிலை விவசாய பள்ளி, தேயிலை நண்பன் தேர்வு செய்து பயிற்சி, 84 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு, 30 ஆயிரம் ருபாய் மாதம் வழங்கப்படுகிறது.

சிறந்த சங்கங்களுக்கு விருது

இந்நிலையில், குன்னுார் தேயிலை வாரியம் சார்பில், 'உபாசி' அரங்கில், சிறந்த தேயிலை சங்கங்கள் மற்றும் சுய உதவி குழுக்களை ஊக்குவிக்க விருது வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு, தலைமை வகித்த தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துத்குமார் பேசுகையில், ''தென் மாநிலங்களில் மிகவும் திறம்பட செயல்பட்ட லட்சுமி நாராயணா சிறு தேயிலை விவசாய சங்கத்திற்கு, முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய், 'ஹய் ரேன்ஜ்' சிறு விவசாய சங்கத்திற்கு இரண்டாம் பரிசாக, 50 ஆயிரம் ரூபாய், கையுன்னி சிறு விவசாயி சங்கத்திற்கு மூன்றாம் பரிசாக, 30 ஆயிரம் வழங்கப்பட்டது. தேயிலை துாளில் ஆர்.சி, எனும் கலப்படம் செய்வதால், நீலகிரி மாவட்டத்தின் பெயர் பாதித்துள்ளது. இதற்கு தீர்வு காண வாரியம் பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு தென் மாநில தேயிலை துாள், 40 சதவீதம் ஏற்றுமதியாகி சாதனை புரிந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நம் மாவட்டத்தில் இயற்கை முறையில், சிறந்த பசுந்தேயிலை வழங்கி, தரமான தேயிலை துாள் உற்பத்தி செய்ய அனைவரும் முன்வர வேண்டும். இதற்கு நல்ல எதிர்காலம் உண்டு,'' என்றார். வாரிய உறுப்பினர்கள் சிவதாஸ், மனோஜ் குமார், தனஞ்செயன் ஆகியோர் பேசினர். தேயிலை மேம்பாடு குறித்து, தேயிலை விஞ்ஞானி டாக்டர் பூபதி ராஜ் விளக்கம் அளித்தார்.

விரைவில் வேளாண் சலுகைகள் கிடைக்கும்...

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தேயிலை வாரிய துணைத் தலைவர் ராஜேஷ்சந்தர் பேசுகையில், ''நீலகிரியின் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள பசுந்தேயிலைக்கு, கிலோ, 35 ரூபாய் விலை கிடைத்தால் மட்டுமே பயன் இருக்கும். மத்திய அரசு, தேயிலை வாரியம் மூலம் விவசாயிகளின் வளர்ச்சிக்கு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நடப்பாண்டு மத்திய அரசால், தேசிய அளிவில் தேயிலை தொழில் மேம்பாட்டுக்கு, 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை முறையில் சிறந்த தேயிலை தயாரிக்க முன்வர வேண்டும். மேலும், தேயிலையை பயிர் துறையில் இருந்து, வேளாண் துறைக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் வேளாண் சலுகைகள் முழுமையாக தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை