கிராமத்தில் சமாதான கூட்டம்; இருதரப்பு ஒற்றுமைக்கு உறுதி
குன்னுார் : மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலட்டணை கிராமத்தில் நிலவிய இருதரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது.குன்னுார் அருகே, மேலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலட்டணை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த இருதரப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண, மேற்குநாடு சீமை பார்ப்பத்தி கிருஷ்ணா கவுடர் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில், நடத்தப்பட்ட ஆலோசனைகளின் படி, இருதரப்பினரும் சமாதான குழு வழங்கிய தீர்ப்பை ஏற்று கொண்டனர். ஊரின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதி மொழி ஏற்றனர்.அதில், படுகர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் சுப்ரமணியன், மேற்குநாடு சின்னகணிகவுடர், மேலுார் கிராம மூத்த சமுதாய தலைவர் கிருஷ்ணா கவுடர், கைகாட்டி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை முன்னாள் பெருந்தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தை முருகன் ஒருங்கிணைத்தார். ஆலட்டணை கிராமத்தின் மூத்த தலைவர் நஞ்சா கவுடர், கீழூர் ஆரட்டி தலைவர் சுரேஷ், இரு பிரிவுகளின் தலைவர்கள் போஸ், ராமமூர்த்தி உட்பட கிராம மக்கள் பங்கேற்றனர்.