ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட... குடியிருப்பு திட்டம்! பழங்குடி நகராட்சி தலைவர் கிராமத்தின் அவலம்
பந்தலுார்: பந்தலுார் அருகே நெல்லியாளம் பகுதியில், நகராட்சி தலைவரின் கிராமத்தில், 5- ஆண்டுகளாக பழங்குடியின வீடு கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. அதில், 3-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நகராட்சி தலைவராக பழங்குடி இனத்தை சேர்ந்த சிவகாமி பதவி வகித்து வருகிறார். இவரின் கிராமம் குன்றில்கடவு பழங்குடியின கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி கோட்டக்குன்னு என்ற பழங்குடியின கிராமமும் உள்ளது. இங்குள்ள குடியிருப்புகள் இடிந்த நிலையில் கடந்த, 2021ம் ஆண்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், எட்டு -பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டம் துவக்கப்பட்டது. அதில் இரண்டு வீடுகள் மட்டும் கட்டப்பட்ட நிலையில், அந்த வீடுகளும் சுவர் பூசப்படாமல் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. மீதமுள்ள வீடுகள் அடித்தளம் போடப்பட்டும், பழங்குடியினர் பகுதி அளவில் கட்டியும் அப்படியே விடப்பட்டது. இதனால், 'தங்களுக்கு குடியிருக்க அரசின் வீடு கிடைக்கும்,' என்ற நம்பிக்கையில், இருந்த பழங்குடியின மக்கள் தற்போது வீடு இல்லாமல், தார்பாலின் கொண்டு மூடப்பட்ட, தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியின் வழியாக நாள்தோறும் நகராட்சி தலைவர் சிவகாமி, சென்று வரும் நிலையில், அவரிடம் கிராம மக்கள் பலமுறை, தொகுப்பு வீடு பிரச்னை குறித்து கூறியும் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. பழங்குடியின மக்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தை சேர்ந்த, எங்கள் சமுதாய பெண் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றதால், எங்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், தினசரி எங்கள் கிராமத்தைக் கடந்து, காரில் அவரது வீட்டிற்கு செல்லும் நிலையில், எங்களின் நிலை குறித்து கண்டு கொள்ள தயக்கப்படுகிறார்,' என, கவலையுடன் தெரிவித்தனர். தலைவர் சிவகாமி கூறுகையில், '' இங்கு வீடு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது. இதனால், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, வீடு கட்டும் பணியை நிறைவு செய்ய மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மீண்டும் கலெக்டரை நேரில் சந்தித்து, இதற்கான தீர்வு விரைவில் காணப்படும்,'' என்றார்.