முதியவரை காப்பாற்றுவது போல் நடித்து தப்பியோடிய திருடன்
பந்தலுார் : பந்தலுார் அருகே முதியவரை காப்பாற்றுவது போல நடித்து, திருடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பந்தலுார் அருகே, கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியில், சாமிமுத்து வயது,86, அவரது மனைவி லட்சுமி,75, ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன், மகள் இலங்கையில் உள்ளனர்.இந்நிலையில்,நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனை அறிந்த அருகில் உள்ளவர்கள் சென்று பார்க்கும்போது, உள்ளே ஒருவர் அந்த முதியவரின் கழுத்தை பிடித்து கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் உள்ளே சென்று அதனை 'வீடியோ' எடுக்க முயற்சித்த போது, அந்த முதியவரை காப்பாற்றுவது போல நடித்துள்ளார். மேலும், சிலர் அந்த வீட்டிற்கும் வந்த போது அவர் தப்பி ஓடி உள்ளார். மக்கள் சேரம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் பெயர் சந்திரன் என்பதும், பின்பக்க கதவை உடைத்து உள்ளே வந்து முதியவரை தாக்கி கொள்ளை அடிக்க முயன்றதும் தெரிய வந்தது. மேலும், முதியவர், மூதாட்டியிடம் பீரோ சாவியை கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் என்று கூறி தாக்கியதும் தெரியவந்தது.போலீசார் கூறுகையில்,' சந்திரன் மீது கொள்ளை உள்ளிட்ட, 7 வழக்குகள் சேரம்பாடி போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளதுடன், ரவுடி லிஸ்டிலும் பெயர் உள்ளது. காயம் அடைந்த முதியவர் மற்றும் அவரது மனைவி பந்தலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பி ஓடிய திருடன் சந்திரனை தேடி வருகிறோம்,' என்றனர்.