சிறுமிக்கு பாலியல் தொல்லை; வடமாநில வாலிபர் கைது
ஊட்டி; கோத்தகிரியில் சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.கோத்தகிரி பகுதியை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளியின், 11 வயது பெண் குழந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 14ம் தேதி சிறுமியின் பெற்றோர் பணிக்கு சென்றுவிட்டனர். வீட்டில், 2 சிறுமிகள் மட்டும் தனியாக இருந்தனர். இரண்டாவது குழந்தை அருகில் உள்ள மளிகை கடைக்கு பொருட்களை வாங்க சென்றுள்ளார்.அப்போது, வீட்டில், 11வயது சிறுமி தனியாக இருப்பதை அறிந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முகேஷ்குமார்,22, என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டுக்கு வந்த பெற்றோர், குன்னுார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். டி.எஸ்.பி., ரவி, இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முகேஷ்குமாரை கைது செய்தனர்.