உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மலைவேடன் பழங்குடியினர் ஜாதி சான்று விவகாரம்; விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமனம்

மலைவேடன் பழங்குடியினர் ஜாதி சான்று விவகாரம்; விசாரணைக்கு மூன்று பேர் கொண்ட கமிட்டி நியமனம்

ஊட்டி; நீலகிரியில் வாழும் மலைவேடன் பழங்குடியினரின் ஜாதி சான்று விவகாரத்தில், மூன்று பேர் கொண்ட கமிட்டியை அரசு நியமித்துள்ளது.ஊட்டி அருகே உல்லட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி, பன்னிமரா கிராமங்களில் மலை வேடன் பழங்குடியினர், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளாக மலைவேடன் ஜாதி சான்று வழங்கப்படவில்லை. குழந்தைகளின் கல்வி, வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் கல்லட்டி சாலையில் இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி மறியலில் ஈடுபட்டனர். ஊட்டி ஆர்.டி.ஓ., பேச்சு வார்த்தை நடத்தினர். பின், மாவட்ட கலெக்டர் மூலம் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும், இரண்டு வாரங்களுக்கு மேலாக, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை.ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் கூறுகையில், ''இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு தமிழொலி (மூத்த மானுடவியலாளர்), காளிதாஸ் (மூத்த மானுடவியலாளர்), அமுத வள்ளுவன் (மானுடவியலாளர்) ஆகியோர் கொண்ட குழுவினரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. ''இக்குழு விரைவில் ஊட்டி வந்து மலை வேடன் பழங்குடியினரை சந்திக்க உள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி