இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை அவசியம்! விவசாயிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா நகராட்சி?
ஊட்டி: 'ஊட்டி வட்டார விவசாயிகளின் நலன் கருதி நகராட்சி நிர்வாகம், மட்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் விற்பனைக்கு தர வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசிக்கின்றனர். நாள்தோறும் சராசரியாக, 45 டன் மட்கும் குப்பை, மட்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பை, தீட்டுக்கல் குப்பை கொட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இயந்திரங்களை கொண்டு மட்கும் மற்றும் மட்காத குப்பை பிரித்து எடுக்கப்படுகிறது. அங்கு மட்கும் குப்பைகள் பிரித்து இயற்கை உரமாக மாற்றப்படுகிறது. மட்காத குப்பை பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. மறுசுழற்சி
இந்நிலையில், ஊட்டி நகரில் நிலவும் குளிரான காலநிலையை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் இயற்கை உரம் தயாரிக்க போதிய ஆர்வம் காட்டவில்லை. மாறாக நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மட்காத குப்பையில் பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சிக்கு பின், அவைகள் வெளிமாவட்டங்களில் உள்ள சிமென்ட் தொழிற்சாலை உபயோகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சிமென்ட் தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இந்த கழிவுகள் சிமென்ட் உற்பத்தியின் போது, சூளையில் எரிக்க பயன்படுகிறது. இந்த நடைமுறையால், பிளாஸ்டிக் கழிவுகள் நிலத்தில் குவிவதை தடுக்க முடிகிறது. இயற்கை விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீலகிரியை பொறுத்த வரை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சேகரிக்கப்படும் மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, இயற்கை உரம் தயாரித்து குறைந்த விலையில் அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்டத்தில் குன்னுார், கோத்தகிரி உட்பட பல நகராட்சிகள் இந்த முறையை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றன. ஊட்டி நகராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு முறையை பின் பற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஊட்டி சுற்றுவட்டாரத்தில் ஏராளமான விவசாயிகளுக்கு இயற்கை உரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. சிறு விவசாயிகள் கூறுகையில்,'நீலகிரி தோட்டக்கலை துறை தற்போது இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், கோத்தகிரியை போல, குறைந்த விலையில் இயற்கை உரம் தர நகராட்சி முன்வந்தால், ஊட்டியில் பல சிறு விவசாயிகள் பயன்பெற முடியும்,' என்றனர். மாதந்தோறும் 150 டன்
நகராட்சி கமிஷனர் வினோத் கூறுகையில், ''ஊட்டி நகராட்சியில் தற்போது, பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு அனுப்புகிறோம். மாதந்தோறும், 150 டன் அனுப்பி வைக்கப்படுகிறது. ஊட்டியின் சீதோஷ்ண நிலையால் உரம் தயாரிப்பதில் சிக்கல் உள்ளதால், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும், சிறு விவசாயிகளின் நலன் கருதி இயற்கை உரம் தயாரித்து விற்பனை செய்ய உரிய ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.