நுாலகங்களால் எதிர்காலம் வளமாக மாறும் :இளைய தலைமுறை பயன்படுத்த அறிவுரை
பந்தலுார்: பந்தலுார் அருகே அய்யன்கொல்லி சிறப்பு நுாலக வாசகர் வட்டம் சார்பாக நுாலக விழிப்புணர்வு, போதை ஒழிப்பு, நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் இளங்கோவன் வரவேற்றார். பேரணியை துவக்கி வைத்து, எம்.எல்.ஏ., திராவிடமணி பேசுகையில்,''தற்போது மக்கள் இருக்கும் இடங்களுக்கு நுாலகங்கள் தேடி வரும் நிலையில், இதனை பயன்படுத்தி இளையோர் மற்றும் மாணவர்கள் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்றார். தலைமை வகித்த மாவட்ட நுாலகஅலுவலர் கிளமண்ட் பேசுகையில், ''பந்தலுார் நுாலகத்தில் படித்த, 17 பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளதன் மூலம், நுாலகங்களை நாடி படிக்க துவங்கினால், சிறப்பான சமுதாயத்தை உருவாக்க முடியும்,'' என்றார். இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் பேசுகையில்,''நுாலகத்திற்கு செல்வது; தினசரி செய்தித்தாள்களை படிப்பது மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்களில் குறிப்புகள் எடுத்து படிப்பது போன்ற செயல்பாடுகளால், தேவையற்ற பழக்கங்களில் இளையோர் ஈடுபடுவது தவிர்க்கப்படும்,'' என்றார். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. நுாலகம் செயல்பட காரணமாக இருந்த புரவலர்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர். நிர்வாகிகள், கார்த்திக், திவாகர், நுாலகர் முத்துசாமி(பொ), நுாலகர் அறிவழகன் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் நித்திய கல்யாணி நன்றி கூறினார்.