உழவரை தேடி வேளாண்மை திட்டம் துவக்கம் விவசாய திட்டங்களை பயன்படுத்த அறிவுரை
பந்தலுார்,; பந்தலுார் அருகே எருமாடு பகுதியில் தோட்டக்கலை துறை சார்பில், 'உழவரைத் தேடி வேளாண்மை' எனும் உழவர் நலத்துறை திட்டம் துவக்க நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் முகாம் நடந்தது. தோட்டக்கலை அலுவலர் விஜயராஜ் வரவேற்றார். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை வகித்து பேசுகையில், ''விவசாயிகள் பயன்பெறும் வகையில், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், இன்று துவக்கப்பட்டுள்ள உழவரை தேடி வேளாண்மை எனும் திட்டத்தின் கீழ், விவசாயிகள் மற்றும் உழவர்களை நேரடியாக தேடி சென்று, அரசு வழங்கும் திட்டங்களை செயல்படுத்தவும் விவசாயத்தை மேம்படுத்தவும் முடியும். விவசாயம் மேம்பட்டால் மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்படும் என்பதால், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகளில் தேயிலையை தவிர, மலை விளை பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தவும் செயல்படுத்தப்படும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்,'' என்றார். வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் பூபாலன் பேசுகையில், ''திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயன்படுத்தும் வகையில் சோலார் முறையிலான பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தவிர பாசன திட்டம், விவசாயம் செய்வதற்கு தேவையான கருவிகள் போன்றவற்றை மானிய விலையில் வழங்குவதால், விவசாயிகள் அவற்றை பெற்று பயன்பெற வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, மார்க்கெட்டிங் உதவி வேளாண் அலுவலர் காயத்ரி, காபி வாரிய முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன், கால்நடை டாக்டர் பிரகாஷ், கூட்டுறவு வங்கி அலுவலர் லட்சுமணன் உள்ளிட்டோர் தங்கள் துறை சார்ந்து, நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். விவசாயிகள் பேசுகையில், 'அரசின் திட்டங்களை பெயரளவுக்கு நிறைவேற்றுவதை தவிர்த்து அவை எந்த அளவிற்கு, விவசாயிகளுக்கு பயன்படுகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தற்போது தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலையில், மாற்று பயிர்களை விவசாயம் செய்ய தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்கவும், காற்றில் சாயும் வாழை மரங்களுக்கு போதிய நிதி உதவி வழங்கவேண்டும்,' என்றனர். தொடர்ந்து, விவசாயிகளுக்கு துறை சார்ந்து விவசாய பொருட்கள் வழங்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர். உதவி தோட்டக்கலை அலுவலர் வினோத் குமார் நன்றி கூறினார்.