பழங்குடியின மக்களுக்கு வீடு கட்ட மாற்று இடம்; தினமலர் செய்தி எதிரொலி
பந்தலுார்; பந்தலுார் அருகே புஞ்சை கொல்லி பழங்குடியின கிராமத்தில், வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் இடம் இல்லாமல் பழங்குடியின மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், மாற்று இடம் வழங்குவது குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட புஞ்சை கொல்லி கிராமத்தில் பழங்குடியின மக்கள் குடியிருந்து வருகின்றனர். காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்த, 20 குடும்பங்கள் ஏழு வீடுகளில் குடியிருந்து வரும் நிலையில், குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் இங்குள்ள ஏழு வீடுகளுக்கும் வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கியது. ஆனால், தற்போது குடியிருக்கும் பகுதியில், வீடுகள் கட்ட போதிய வசதிகள் இல்லாத நிலையில், வீடு கட்ட உத்தரவு கிடைத்தும் இடம் இல்லாமல் தவித்து வந்தனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழில், 16-ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதனையடுத்து, மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி, பழங்குடியினர் நலத்துறை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ.,க்கள் யுவராஜ், ஷீஜா, ராஜேந்திரன் ஆகியோர் கிராமத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, இவர்களுக்கு குழிவயல் பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான இடம் ஒதுக்கீடு செய்ய ஏற்கனவே பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், அந்த இடத்தில் வீடுகள் கட்டுவது குறித்து காட்டுநாயக்கர் சங்க தலைவர் சந்திரன் மற்றும் கிராம மக்களிடம் ஆலோசனை செய்தனர். அப்போது, 'வனமாக உள்ள இந்த பகுதியை சீரமைத்து தொகுப்பு வீடுகள் கட்டித் தரவும், யானைகள் கிராமத்திற்குள் வராமல் தடுக்கும் வகையில் அகழி அல்லது சோலார் வேலி அமைத்து தரவும், சமுதாயக்கூடம் அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, மக்கள் தெரிவித்தனர்.அதிகாரிகள் கூறுகையில், 'இது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உரிய தீர்வு ஏற்படுத்தப்படும்; அதன்பின், உடனடியாக மாற்று இடத்தில் தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். அதனை பழங்குடியின மக்களும் ஏற்றுக்கொண்டனர்.