இந்துக்களின் இறை பக்தி ஒற்றுமையின் வெளிப்பாடு
பந்தலுார்; பந்தலுார் அருகே பொன்னானி ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில், பாகவத தொடர் சொற்பொழிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கான அலுவலகம் கோவில் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், கமிட்டி நிர்வாகி வினோத் வரவேற்றார். ரீனா இறை வணக்கம் பாடினார்.கதம்பன் நம்பூதிரி குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது:மன்னர் ஆட்சி கால படையெடுப்பின் போது பல கோவில்கள் சிதிலமடைந்தன. அப்போது, இந்துக்கள், படைவீரர்களால் தாக்கப்பட்ட நிலையில், இந்துக்களின் இறை பக்தியால் தாக்குதலில் பெரிய அசம்பாவிதங்கள் நடக்காமலும், கோவில்கள் சிதிலம் அடைந்தாலும் அதன் தன்மை மாறாமல் உள்ளது. எனவே மக்கள் இறைவனை தினசரி வழிபடவும், இறை பக்தியின் வலிமையை குழந்தைகளுக்கும் எதிர்கால தலைமுறைக்கும் தெரிவிக்கவும் முன்வர வேண்டும். அதன் பயனை இந்து சமுதாய மக்கள் உணர வேண்டும் எனும் நோக்கில், நடத்தப்படும் பாகவத தொடர் சொற்பொழிவில், பங்கேற்று அதன் முழுமையான பயனை பெறுவதற்கு முன் வர வேண்டும். இதில் பங்கேற்றால் இறை பக்தியும், அதன் மூலம் கிடைக்கும் பயனையும் முழுமையாக உணர முடியும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பிரேமா கங்காதரன் தனது சொந்த செலவில் நிகழ்ச்சிக்காக இரண்டு பகவத் கீதை புத்தகங்களை கோவில் மேலாளர் சந்தியாவிடம் வழங்கினார்.தொடர்ந்து, நிகழ்ச்சியின் தர்மகர்த்தா மனோஜ்குமார், நிர்வாகிகள் மாரிமுத்து, உன்னிகிருஷ்ணன், புஷ்பாகரன், வேலாயுதம், கணேஷ் நம்பூதிரி, பிரபாகரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சி குறித்து பேசினர். பந்தலுார் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். நிர்வாகி ரதீஷ் நன்றி கூறினார்.