மூடப்பட்ட பார்க்கிங் தளத்தை திறக்க வேண்டும் அன்பு மேடை குழு நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
கோத்தகிரி,; கோத்தகிரி பஸ் நிலையம் அன்பு மேடை பாதுகாப்பு குழு நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.தலைவர் நாகேந்திரன் தனிமை வகித்தார். பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:பஸ் நிலையத்தில், தனியார் வாகனங்கள் நிறுத்த முடியாத அளவுக்கு, போலீசார் பேரிகார்டு அமைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது. அவசர தேவைக்கு வாகனங்கள் நிறுத்தினால், போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதனால், பலர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தவிர போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இது குறித்து, கலெக்டருக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, பேரிகார்டை அகற்றி வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோத்தகிரி டானிங்டன் பகுதியில், கடை உரிமையாளர்கள், சாலையை ஒட்டி ஆக்கிரமித்து வியாபாரம் செய்கின்றனர். இதனால், சாலையின் அகலம் குறைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க,ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும்.கோத்தகிரி கோடநாடு சாலையில் விறகுகளை குவியலாக அடுக்கி வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, விறகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.சங்க துணைத் தலைவர்கள் ராஜேஸ்வரி, சுந்தர்ராஜ், இணை செயலாளர் ராஜா, நிர்வாகிகள் ரங்கராஜ் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி பிரபாகரன் நன்றி கூறினார்.