உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தேவர் சோலையில் மற்றொரு புலியை பிடிக்க  மீண்டும் கூண்டு!: எஸ்டேட் புதரை வாழ்விடமாக மாற்றிய விலங்குகள்

தேவர் சோலையில் மற்றொரு புலியை பிடிக்க  மீண்டும் கூண்டு!: எஸ்டேட் புதரை வாழ்விடமாக மாற்றிய விலங்குகள்

கூடலுார்: கூடலுார் தேவர்சோலை பகுதியில் மீண்டும் மாடுகளை தாக்கி கொன்று வரும் மற்றொரு புலியை பிடிக்க, வனத்துறை கூண்டு வைத்துள்ள நிலையில், எஸ்டேட் பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற மக்கள் வலியுறுத்தினர். நீலகிரியில் முக்கிய விவசாய பயிரான பசுந்தேயிலைக்கு, கடந்த பல ஆண்டுகளாக போதிய விலை கிடைப்படதில்லை. மேலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அரசு தேயிலை தோட்ட கழகம் (டான்டீ) சொந்தமான தேயிலை தோட்டங்கள், பல தனியார் எஸ்டேட் நிறுவனங்கள் பல ஏக்கர் பரப்பிலான தேயிலை தோட்டங்களை பராமரிக்க முடியாமல் விட்டுள்ளனர். பராமரிப்பு இல்லாத அப்பகுதிகள் முட்புதர்கள் வளர்ந்து காணப்படுவதால், உணவு தேடி வரும் வனவிலங்குகள் அவற்றில் முகாமிடுகின்றன. இவ்வாறு வரும் மாமிச உண்ணிகள் கால்நடைகளை தாக்கி, மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. தேவர்சோலையில் அதிகம் கூடலுார் தேவர்சோலை பகுதியில், இவ்வாறு பராமரிப்பு இல்லாத தனியார் எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அங்குள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட இரண்டு புலிகள், மேய்ச்சலுக்கு விட்ட, 30க்கும் மேற்பட்ட மாடுகளை தாக்கி கொன்றது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து, வனத்துறை வைத்த கூண்டில் மூன்று மாதத்திற்கு பின், 3 வயது ஆண் புலி, 29ம் தேதி சிக்கியது. வனத்துறையினர், அதனை முதுமலை வனத்தில் விடுவித்தனர். பொது மக்கள் நிம்மதி அடைந்திருந்த நிலையில், பிடிப்பட்ட புலியுடன் இருந்த மற்றொரு புலி கடந்த இரண்டு வாரத்தில் இரண்டு மாடுகளை தாக்கி கொன்றது. அச்சமடைந்துள்ள மக்கள் அந்த புலியை பிடிக்க வலியுறுத்தினர். இதை தொடர்ந்து அப்பகுதியில் கூண்டுகள் வைத்து, புலியை பிடிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மக்கள் கூறுகையில், 'மாடுகளை தாக்கி கொன்ற, இந்த புலி கூண்டில் சிக்கினாலும், பராமரிப்பு இல்லாத எஸ்டேட் பகுதியில், மாமிச உண்ணிகள் வந்து முகாமிடுவதை தடுக்க முடியாது. மேலும் அவை கால்நடைகளை தாக்கி, தொழிலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவது தொடரும். எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக, பராமரிப்பில்லாத எஸ்டேட் பகுதிகளில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி, கூடுதல் ஊழியர்களை நியமித்து கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ