கோடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரன்ட்
கோடநாடு: கோத்தகிரி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மூவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், 11 பேர் கொண்ட கும்பல், எஸ்டேட்டுக்குள் புகுந்து, காவலாளியை கொலை செய்து, ஆவணங்களை திருடி சென்றது. இந்த வழக்கு, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நீதிபதி முரளிதரன் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வக்கீல் கனகராஜ், சி.பி.சி.ஐ.டி., -- ஏ.டி.எஸ்.பி., முருகவேல் தலைமையில் போலீசார் ஆஜராகினர். அதேபோல, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, வாளையார் மனோஜ் மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் நீண்ட காலமாக நீதிமன்றத்தில் ஆஜராகாத, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ் சாமி ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி முரளிதரன் உத்தரவிட்டார். வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கு விசாரணையை ஜன., 30ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.