அதிக காரம் வாய்ந்த நெய் மிளகாய்; சீசன் துவங்கியதால் கிலோ ரூ.600 வரை விற்பனை
குன்னுார்; குன்னுார், 'நெய்மிளகாய்' சீசன் துவங்கியதால் மார்க்கெட் பகுதியில் கிலோ, 600 வரை விற்பனை செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில், குன்னுார், கூடலுார் மற்றும் ஏற்காடு, மூணாறு போன்ற, மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் நெய்மிளகாய் விளைகிறது. தற்போது, குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் இதன் சீசன் துவங்கி உள்ளதால், இவை மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. 50 கிராம், 30 ரூபாய் என விற்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட இந்த மிளகாய், 'பூத் ஜலக்கியா' என்ற மிளகாயின் சாதனையை, கடந்த, 2012ல், முறியடித்தது. அதன்பின், தற்போது வரையில், அதிக காரத்தன்மை மிளகாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. தோட்டக்கலை துறையினர் கூறுகையில்,'கேப்சிகம் சைனென்ஸ் இனத்தை சேர்ந்த, 'டிரினிடாட் மோருகா ஸ்கார்பியன்' ரகத்தை இந்த மிளகாய் சார்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குன்னுார், கூடலுாரில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த மிளகாய் கொண்டு சமைக்கும் உணவுகள், நெய்யின் சுவை கொண்டுள்ளதால், 'நெய் மிளகாய்' என அழைக்கப்படுகிறது. அடர் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் இந்த மிளகாய், ஜூன் மாதம் முதல் டிச., மாதம் வரை, அதிக மகசூல் தரும். பொதுவாக, மிளகாயை உணவில் சேர்ப்பதால் பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது. உடல் வெப்பத்தை சீராக வைத்து கொள்வது; புற்று நோய் வராமல் தடுப்பது; கீழ்வாதம் மற்றும் வலி நிவாரணியாக பயன்படுகிறது. இதனால், இதனை பலரும் உணவில் தவறாமல் சேர்த்து கொள்கின்றனர்,' என்றனர்.