| ADDED : டிச 27, 2025 06:35 AM
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே சேற்றில் சிக்கி, 4 வயது குட்டியானை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கூடலுார் தேவர்சோலை அருகே தனியார் எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழந்தது தெரியவந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்பகுதியில், யானை கூட்டம் இருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும், யாரும் அருகே, செல்லாமல், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானை கூட்டம் நேற்று அதிகாலை அப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் துாசர் சிண்டே வனச்சரகர் ராதாகிருஷ்ணன், வனவர் வீரமணி உடலை ஆய்வு செய்தனர். முதுமலை வன கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் குட்டி யானைக்கு, 4 வயதிற்கு இருக்கும். சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது. யானையின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது,' என்றனர்.