டால்பின்நோஸ் அருகே நீர் வீழ்ச்சியை காண தடை: அனுமதிக்க வனத்துறையிடம் கோரிக்கை
குன்னுார்: 'குன்னுார் டால்பின்நோஸ் காட்சி முனை சீரமைப்புக்காக மூடப்பட்டுள்ள நிலையில், நீர் வீழ்ச்சி காண சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. குன்னுாரில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, டால்பின்நோஸ் காட்சிமுனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள கழிப்பிடம், நடைபாதை உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால், மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் கடந்த, 11ல் துவங்கியது. இதனால், கடந்த, 12ம் தேதி முதல் டால்பின்நோஸ் காட்சிமுனை தற்காலிகமாக பணிகள் முடியும் வரை மூடப்பட்டுள்ளது. தற்போது, ஆயுத பூஜை மற்றும் வார இறுதி விடுமுறை காரணமாக, நீலகிரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. காட்சி முனை மூடப்பட்டுள்ள நிலையில், தேயிலை தோட்டம், தனியார் எஸ்டேட் பகுதியில் இருந்து இயற்கை காட்சிகள் மற்றும் நீர்வீழ்ச்சியை பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர். ஆனால், தற்போது ஆடர்லி பிரிவின் மேல் பகுதியில் தடுப்பு அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், டால்பின் நோஸ் பகுதிக்கு செல்ல முடியாமல் பலரும் ஏமாற்றம் அடைகின்றனர். 'துாரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி காணும் இடம் வரை அனுமதிக்க வேண்டும்,' என, சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன டிரைவர்கள் வலியுறுத்துகின்றனர். குன்னுார் ரேஞ்சர் ரவிந்திரநாத் கூறுகையில், ''ஏற்கனவே இங்குள்ள தனியார் எஸ்டேட் அருகே இயற்கை காட்சிகள், நீர்வீழ்ச்சி காணும் இடம் வரை வந்து செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கவில்லை. அரசு பஸ் போக்குவரத்து மற்றும் சுற்றுலா வாகனங்கள் திருப்பி செல்ல முடியவில்லை என்ற காரணத்திற்காக போலீசார் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளனர்,'' என்றார்.