உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஜாலி வாக் வரும் பந்தலுார் டஸ்கர்--12; 24 மணி நேர கண்காணிப்பில் வனத்துறை

ஜாலி வாக் வரும் பந்தலுார் டஸ்கர்--12; 24 மணி நேர கண்காணிப்பில் வனத்துறை

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை பகுதியில் தினசரி, 'வாக்கிங்' வரும் யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். பந்தலுார் நெலாக்கோட்டை பஜார் சாலையை ஒட்டிய புதரில் 'பந்தலுார் டஸ்கர் -12' என்று வனத்துறையால், பெயரிடப்பட்டுள்ள ஆண் யானையும், குட்டிகளுடன் முகாமிட்டுள்ள யானை கூட்டமும் உள்ளது. அதில், பந்தலுார் டஸ்கர் இரவு, 7:00 மணிக்கு மேல் புதரில் இருந்து சாலைக்கு வந்து, குடியிருப்புகள், போலீஸ் நிலையம் வழியாக தனியார் தோட்டத்திற்குள் செல்கிறது. விடியும் வரை அங்கு முகாமிடும் யானை, காலை, 6:30 மணிக்கு தினசரி சாலை மற்றும் குடியிருப்புகள் வழியாக 'வாக்கிங்' வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. யானை வரும் போது எதிரே வாகனங்கள் வந்தால் தாக்கும் நிலையில், இதுவரை ஆறு வாகனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த யானையால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன்னர், பிடித்து சென்று அடர்வனத்தில் விட, மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், 'இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்கப்படும்,' என, தெரிவித்த வனத்துறையினர் ரேடியோ காலரும் வாங்கி வைத்துள்ளனர். இதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், யானையை, கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர், 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் கூறுகையில், 'தற்போது நல்ல காலநிலை நிலவுவதால், வனத்துறையினர் உடனடி அனுமதி பெற்று, இந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி, கும்கிகள் உதவியுடன், அடர்த்தியான வன பகுதிக்குள் இந்த யானையை கொண்டு சென்று விட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி