கூடலுார்: கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, கேரளாவில் இருந்து நீலகிரிக்கு வரும் கனரக வாகனங்களுக்கு, கூடலுாரை ஒட்டிய மாநில எல்லைகளில் கிருமி நாசினி தெளித்தபின் அனுமதி வழங்கப்படுகிறது. கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டையம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல், பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்நோய் தமிழகத்தில் பரவுவதை தடுக்கும் வகையில், மாநில எல்லையை ஒட்டிய மாவட்டங்களில் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த, தமிழக பொது சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக- கேரளா எல்லைகளில் உள்ள நுழைவு வாயில் பகுதிகளில், கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஊழியர்கள் நியமித்து நேற்று முதல் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்தி உள்ளனர். அதன்படி, நீலகிரி மாவட்டம், கூடலுாரை ஒட்டிய தமிழக- -கேரளா எல்லையான நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், உள்ளிட்ட, 8 சோதனை சாவடிகளில், கால்நடை பராமரிப்பு துறை ஊழியர்கள் பணியில் நியமிக்கப்பட்டு, கேரளாவில் இருந்து பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் டயர்களுக்கு கிருமி நாசினி தெளித்த பின் அனுமதி வழங்குகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. எனினும், கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கையாக மாநில எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளோம். கேரளாவிலிருந்து வரும் கனரக வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தபின் நீலகிரிக்கு அனுமதிக்கப்படுகிறது. அரசின் அடுத்த உத்தரவு வரும் வரை இப்படி தொடரும்,' என்றனர்.